பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வழக்கில் பெற்றோர் மற்றும் மகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

ஓமலூர் பொட்டிபுரம் பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று சுரேஷின் பெற்றோர் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

 

பின்னர் அப்பகுதியில் உள்ள கோவிலில் மாணவியை சுரேஷ் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அங்கு சென்றதையடுத்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

 

பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர் ஆசை வார்த்தை கூறி தன்னை கடத்தியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் ஓமலூர் காவல் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply