குழந்தைகளின் ஆபாசப்பட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில், தமிழகத்தில் முதல் நபராக திருச்சியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாசப் பட வீடியோக்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளன.மேலும் இது போன்ற ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, பிறருக்கு பகிர்ந்தாலோ கூட கடும் நடவடிக்கை பாயும் என்ற சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
சமீபத்தில் அமெரிக்க உளவு நிறுவனம் கொடுத்த புள்ளி விபரப்படி, குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்ப்பது, பகிர்வதில் இந்தியாவில் சென்னையில் தான் அதிகம் பேர் உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.அத்துடன் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆபாச வீடியோ பார்க்கும் 3 ஆயிரம் பேர் கொண்ட பட்டியலையும் தமிழக காவல் துறைக்கு அனுப்பி வைத்தது.
இதைத் தொடர்ந்து, இந்த ஆபாசப் பட வீடியோ தொடர்பான குற்றங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் தனிப்படை உருவாக்கப்பட்டது. அத்துடன் அமெரிக்க அமைப்பு கொடுத்த பட்டியலில் உள்ளோர் மீது நடவடிக்கை பாயும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆபாசப் படம் பார்ப்பதையோ, பகிர்வதையோ இனியும் தொடர்ந்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை பாயும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், முதல் கைது நடவடிக்கையை திருச்சி போலீசார் எடுத்துள்ளனர்.திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர், ஆபாசப் படங்களை, வாட்ஸ் அப் மூலம் தனது குழுவில் உள்ள நண்பர்களுக்கு பதிவேற்றம் செய்ததாக, கைது, செய்யப்பட்டுள்ளார். 42 வயதான கிறிஸ்டோபர் அல்போன்ஸ், ஏ.சி.மெக்கானிக்காக உள்ளார்.
இவர், நிலவன், ஆதவன் என்ற புனைப்பெயர்களில் பொழுது போக்காக கடந்த 2 வருடங்களாகவே சிறுமிகளின் ஆபாச படங்கள்,வீடியோக்களை பதிவேற்றம் செய்து தமது வாட்ஸ் அப் குழுவில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டுள்ள அல்போன்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்றும், இந்தக் குற்றத்திற்காக 7 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் அல்போன்சின் வாட்ஸ் அப் குழுவில் உள்ள அவரது நண்பர்கள் 15 பேரிடமும் திருச்சி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் அவர்கள் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்றும் தெரிகிறது.
குழந்தைகள் ஆபாசப் படம், வீடியோ தொடர்பான குற்றங்களை தடுக்க, தமிழக காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்ட ஒரே வாரத்தில் முதல் கைது நடவடிக்கையும் பாய்ந்துள்ளது இந்த கைது நடவடிக்கையை சமூக அக்கறையுள்ள பலரும் வெகுவாக பாராட்டியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ பார்ப்போர், பகிர்வோர் பலரும் பீதியடைந்துள்ளனர்.