“ரோகித்..லோகேஷ்.. கோஹ்லி… அபாரம்” மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!!

மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, கேப்டன் கோஹ்லி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

 

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் நடைபெற்றது.முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்தன. இந்நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்ற நிலையில் வெற்றி பெறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி கேப்டன் போலார்டு, பந்து வீச்சை தேர்வு செய்தார்.களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் மின்னல் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்பார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய இருவரும் வேகமாக அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கோஹ்லி கோஹ்லி களமிறங்காமல், விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்த தவறிய ரிஷப் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின் லோகேஸுடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி, மளமளவென ரன்களை குவிக்க, இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் 200 ஐ கடந்தது. 91 ரன்கள் எடுத்திருந்த ராகுல், சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவுட்டாகி ஏமாற்றினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.

 

வெற்றிக்கு 241 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மே.இ.தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிம்மன்ஸ் (7), கிங்(5) ஆகியோரை புவனேஷ்வர், ஷமி வேகத்தில் வீழ்த்தினர். அடுத்து வந்த பூரன் சசாரிடம் டக் அவுட்டானார். தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த மே.இ.தீவுகள் அணியால், கடைசி வரை இந்த சரிவில் இருந்து மீள முடியவில்லை. இடையில் ஹெட்மயர்(42), போலார்டு (68) ஆகியோர் அதிரடி காட்டினாலும் வெற்றி இலக்கின் அருகில் கூட செல்ல முடியவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை லோகேஷ் ராகுலும், தொடர் நாயகன் விருதை கோஹ்லியும் தட்டிச் சென்றனர். எடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத உள்ளன. முதல் போட்டி வரும் 15-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது


Leave a Reply