இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி 48…!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50வது பிஎஸ்எல்வி 48 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரிசார்ட் 2பி ஆர் ஒன் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

 

628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலமாக இன்று மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

 

ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை அடுத்து இறுதிகட்ட பணியான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கைகோள் இந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பபட உள்ளன.

 

விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களிலேயே பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்டிலிருந்து ரிசார்ட் 2பி ஆர் ஒன் பிரிந்து பூமியில் இருந்து 576 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதுவரை வெளி நாடுகளைச் சேர்ந்த 130 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் எழுபத்தைந்தாவது ராக்கெட் ஆகும்.


Leave a Reply