தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
பின்னர் சிறிது இடைவெளி விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்நிலையில் இலங்கைக்கு தென்கிழக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளதால் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 9.9 மில்லி மீட்டர் மழையும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 8.8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் 10 மில்லி மீட்டருக்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, திருவண்ணாமலை, திருவாரூர் விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.