“தலைவர் பதவி ரூ.50 லட்சம் ; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்”! உள்ளாட்சி தேர்தலில் ஏலத்தையும் ஆரம்பிச்சாச்சு!!

கடலூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணைத் தலைவர் பதவி ரூ 15 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலே, கிராமப்புறங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவிகளை மறைமுக ஏலம் விடுவதும் காலம் காலமாக நடந்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரே கிராமத்தில் 2 , 3 பேர் போட்டியிடுவதால் பகைமையும், ஏன் வெட்டு, குத்து என கோஷ்டி மோதல் சம்பவங்களும் அரங்கேறி அந்த கிராமமே ரெண்டு பட்டது போலாகி விடும். இதைத் தவிர்க்கவே சில கிராமங்களில் ஒன்று கூடிப் பேசி போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கொண்டு வந்தனர். காலப்போக்கில் இதிலும் கவுரவப் போட்டி ஏற்பட, ஏலத்தில் விடும் வழக்கத்தை கொண்டு வந்து விட்டனர் போலும்.

 

கடந்த சில தேர்தல்களில் இப்படி ஏலம் விடுவது பல பகுதிகளில் சகஜமாகி விட்டது. நல்ல வருவாய் உள்ள பஞ்சாயத்துகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் தலைவர் பதவி ஏலம் போனதும் உண்டு. சட்டரீதியில், இப்படி பதவிகளை ஏலம் விடுவது மகா குற்றம் என்பதால், அரசுத் தரப்பில் இதைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டாலும் ஒரு பக்கம் ரகசியமாக ஏலம் விடுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

தற்போது தமிழகத்தில் ஊரகப் பகுதி உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தான் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள நடு குப்பம் என்ற ஊராட்சியில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நடு குப்பம் கிராம முக்கியஸ்தர்கள் மத்தியில் இந்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஊராட்சித் தலைவர் பதவியை 50 லட்சம் ரூபாய்க்கு சக்திவேல் என்பவரும், துணைத் தலைவர் பதவியை முருகன் என்பவர் ரூ.15 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்த சக்திவேல் அதிமுகவைச் சேர்ந்தவர்.மேலும் கடந்த முறை இதே ஊராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். துணைத் தலைவர் பதவியை ஏலம் எடுத்த முருகன் தேமுதிகவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

 

இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், வரும் 15-ந் தேதிக்குள் ஏலத் தொகையை ஊர்ப் பொதுவில் செலுத்தி விட வேண்டும் எனவும் ஏலம் நடத்திய போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். கண்மாய் குத்தகை,மார்க்கெட் குத்தகை போல், ஒரு ஊராட்சியை நிர்வாகம் செய்யக் கூடிய தலைவர் பதவியையும் குத்தகைக்கு விட்டது போல் ஏலத்தில் விட்டுள்ளது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது. இவ்வளவு கூடுதல் தொகையைக் கொடுத்து பதவி, அதிகாரத்துக்கு வருபவர்கள், குத்தகைக்கு எடுத்தது போல், போட்ட பணத்தை 5 ஆண்டுக்குள் குறுக்கு வழியில் சம்பாரிக்கத் தானே பார்ப்பார். அதை விடுத்து அவர்களிடம் நியாயம், நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.


Leave a Reply