கேரளாவில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அரங்கேற்றிய பைக் சாகசம்!

கேரளாவில் தனியார் பள்ளி ஒன்றில் இன்பச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக பள்ளிமாணவர்கள் அரங்கேற்றிய வாகன சாகசங்கள் குறித்து அம்மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

உயர்ரக இருசக்கர வாகனத்தில் சீறிப்பாயும் இளம்பெண் ,புழுதி பறக்க சுழலும் கார், அலங்காரம் செய்யப்பட்ட பேருந்தின் சாகசம் இவை அனைத்தும் அரங்கேறியது சர்க்கஸ் மைதானத்தில் அல்லது சினிமா படப்பிடிப்பு தளத்தில் அல்ல.

 

இந்த காட்சிகள் அனைத்தும் அரங்கேறியது கேரளாவில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தான். கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கராவில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு கடந்த 24 ஆம் தேதி இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

சுற்றுலா செல்வதற்கு முன்பாக பெற்றோர்களுடன் மாணவ மாணவியர் அனைவரும் பள்ளி மைதானத்தில் குழுமியிருந்தனர். சுற்றுலா செல்வதற்கு முன்பாக உற்சாக மிகுதியில் பள்ளி மாணவ மாணவியர் இவ்வாறான அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

 

வீடியோக்கள் கொட்டாரக்கரா வட்டார போக்குவரத்து துறை கவனத்திற்கு செல்ல இந்த அட்டகாசங்கள் அனைத்தையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடனடியாக பேருந்தின் உரிமையாளரை அழைத்த அதிகாரிகள் சுற்றுலா முடிந்தவுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

 

பேருந்தினுள் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அபாயகரமான வகையில் அதிவேகமாக இயக்கியது ஓட்டுனரா? அல்லது பள்ளி மாணவர்களா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.


Leave a Reply