தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பெண்களை அழைத்து வந்து தனியார் விடுதிகள், வீடுகளில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனியார் விடுதிகள் சிலவற்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
சோதனை நடத்திய காவல்துறையினர் அதிரடியாக சிலரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு நகர் அமைந்துள்ளது. கொடைக்கானல் சுற்றுலா தளம் செல்வதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் வத்தலகுண்டு நகர் வழியேதான் செல்கிறார்கள்.
இங்கு உள்ள தனியார் விடுதிகளில் நடைபெற்ற அதிரடி சோதனையில் தான் பெண்களும், ஆண்களும் சிக்கியுள்ளனர். வத்தலகுண்டு நகரில் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில விடுதிகளில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும்படி சில பெண்களும், ஆண்களும் வந்து செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த சில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்திய காவல் துறையினர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள், 6 ஆண்கள் என 10 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்த 22 பேரையும் திண்டுக்கல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.