சென்னையில் சில்லறை பிரச்சனையால் பாதியில் இறக்கி விடப்பட்ட நபர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கமலக்கண்ணன் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஊரிலிருந்து தன்னை பார்க்க வந்த குடும்பத்தினரை வழியனுப்பிவிட்டு சென்ட்ரலில் இருந்து தியாகராயநகரில் செல்லும் பேருந்தில் ஏறி இருக்கிறார்.
டிக்கெட் எடுக்க தன்னிடம் இருந்து 500 ரூபாய் நோட்டை கொடுத்ததால் 23 சி பேருந்து நடத்துனர் சில்லறை எனக்கூறி கமலக் கண்ணனை பாதியில் இறக்கி விட்டிருக்கிறார். இதேபோல் இரண்டு பேருந்துகளில் சில்லறை பிரச்சனையால் பாதியில் இறக்கிவிடப்பட்ட அவர் பின்னர் ஆட்டோவில் சென்றிருக்கிறார்.
தேனாம்பேட்டை அருகே சிக்னலில் சென்று கொண்டிருக்கும் போது அவர் முதலில் ஏறியிருந்த 23 சி பேருந்து வந்திருக்கிறது. திடீரென ஆட்டோவிலிருந்து இறங்கிய கமலக்கண்ணன் அரசு பேருந்து கண்ணாடி மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்த நபர் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.