சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நான்காவதாக பிறந்த பெண்குழந்தையை இருபதாயிரம் ரூபாய்க்கு பெற்றோரே விற்ற அவலம் நடந்திருக்கிறது. இது குறித்த தகவலின் பேரில் ஒரு மணி நேரத்தில் அந்த குழந்தை மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி சேத்து பாதை பகுதியை சேர்ந்த கல்லுடைக்கும் கூலித் தொழிலாளியான சின்னத்தம்பி,உமா தம்பதிக்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் மூன்றாவது பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனை வளர்க்க முடியாமல் குழந்தையை விற்று விட்டதாக தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேத்து பாதையில் உள்ள சின்ன தம்பி வீட்டுக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் விசாரணை நடத்தினார்.
அப்போது மூன்றாவது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை அந்த வீட்டில் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறிவிட்டு வந்த நிலையில் வெகு நேரமாகியும் குழந்தையை கொண்டு வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வருவாய்த்துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் டேனிஷ் பேட்டையை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு 20,000 ரூபாய்க்கு குழந்தையை சின்னத்தம்பி மாதம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சின்னத்தம்பி தம்பதியை டேனிஷ்பேட்டைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் பெண் குழந்தையை மீட்டனர். குழந்தையை விற்பனை செய்வது குற்ற நடவடிக்கை என்றும் கணவன் மனைவியை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.