அரசியல் அமைப்பு தினமான இன்று, மகாராஷ்டிரா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டை நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பாஜக அரசு பதவியேற்ற விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில், இந்த குழப்பங்களுக்கு சூத்திரதாரியாக இருந்த துணை முதல்வர் அஜித் பவார் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த முதல்வர் பட்னாவிசும் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அரசியல் அமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு, இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.