‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டுக் குழு கூட்டம்’- எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பு ; என்.சி.பி மட்டும் பங்கேற்பு!!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டுக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளது.
1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த பின்,இந்திய அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டு 1950-ம் ஆண்டு இதே நாளில் ஏற்கப்பட்டது. அதன் 70-வது ஆண்டு தினத்தை கொண்டாடும் பொருட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இரு அவைகளின் எம்.பி.க்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியல் சாசன விதிகளை அத்துமீறுகிறது என்றும், மகாராஷ்டிரா விவகாரத்தில் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரினாமுல், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் மட்டும் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், பாஜகவுக்கு எதிராக சிவசேனாவுடன் தேசிய வாத காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன.இந்நிலையில் இந்தக் கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




