--- --:--:-- --

மலிவான தனிநபர் தாக்குதல், அது என் காரும் இல்லை – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு சு.வெங்கடேசன் பதில்

3

“என் மீது மலிவான தனிநபர் தாக்குதல், அது என் காரும் இல்லை, இன்றுவரை எனக்கு சொந்தக்கார் ஏதும் இல்லை” என ஆடம்பர கம்யூனிஸ்ட் நிர்வாகி என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விமர்சித்ததற்கு சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் பதிலளித்துள்ளார். ”கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது” எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விமர்சித்ததற்கு சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் எதிர்வினையாற்றியுள்ளார்.

 

முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலிப் புத்தகங்கள்தான் நிறைந்திருப்பதாகவும் அந்தத் தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய வேண்டுமென்றால், காஞ்சி சங்கராச்சாரியார் புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்த கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல் என்றும் அதில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிப்பது தான் நீதிபதியின் வேலை எனக்கூறினார். மேலும் நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை என்றும் சு.வெங்கடேசன் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தான் நகைச்சுவையாக பேசியதை வைத்து நீதிமன்றப் பணிகளை தான் எப்படி செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். தான் ரயில் நிலையம் செல்லும்போது பென்ஸ் காரில் ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கியதாகவும் அவரை யாரோ என நினைத்தபோது அது சு.வெங்கடேசன் என்பது தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.

 

மேலும் ரயிலில் சு.வெங்கடேசன் முதல் வகுப்பில் பயணித்ததாகவும் தான் சாதாரண வகுப்பில் பயணித்ததாகவும் கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறாரே என்று தான் நினைத்துக் கொண்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் ஆடம்பர கம்யூனிஸ்ட் நிர்வாகி என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விமர்சித்ததற்கு சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் எதிர்வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், “ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன்.

 

 

கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது. நான் ரயில்நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.

 

 

அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது. நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.

 

 

இக்கேள்வி “தூய்மை மற்றும் எளிமை” எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும்போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம். ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை.” என பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon