மகாராஷ்டிராவில் திரைமறைவில் ரகசியமாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு, ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எதையும் செய்து விடுவதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஷ், நேற்று முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஆட்சியமைக்க போதிய பலம் இல்லாத நிலையில், தேசியவாத காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி, பாஜக ஆட்சியமைத்த விதம் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது என பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டன குரல் கொடுத்துள்ளன.
இந்நிலையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்து வரும் தேமுதிகவும் , மகாராஷ்டிரா விவகாரத்தில் அக்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம், மகாராஷ்டிரா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ஆட்சி அதிகாரம் இருப்பது என்பதற்காக எதையும் செய்து விடமாலா? ஏன் இந்த அவசரம். மகாராஷ்டிராவில் ஆளுநர் ஆட்சி நடந்து வருகிறது. போதிய பலம் இருப்பதை சட்டப்பேரவையில் நிரூபித்த பின்னர் ஆட்சியமைக்கலாமே? என்ற பிரேமலதா விஜயகாந்த், நடப்பது அனைத்தையும் நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்தே வருகிறார்கள் என்று பாஜகவை விமர்சித்துள்ளார்.