ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனிநபர் கழிப்பறை கட்டுவதில் லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்தான் ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த ஊராட்சியில் 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் எத்தனை தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என கேட்டுள்ளார். அதில் 700க்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் அந்த மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏராளமான கழிவறைகள் கட்டாமல் ஊராட்சி நிர்வாகம் கட்டியதாக லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் செய்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.