மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம் ; பாஜகவுடன் கைகோர்த்த தேசியவாத காங்கிரஸ்..! பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பு!!

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இன்று முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே இரவில் தேசியவாத காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி சேரஇன்று காலை எதிர்பாராத திருப்பமாக, பாஜகவின் பட்னாவிசுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றார்.

 

மகாராஷ்டிராவில்288 உறுப்பினர் சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்று 24-ந் தேதி முடிவுகள் வெளியானது. இதில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க இந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், முதல்வர் பதவிச் சண்டையில் இரு கட்சிகள் இடையேயான கூட்டணி முறிந்தது.

 

ஆனாலும்1 அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற ரீதியில் பாஜக வை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யா ரி அழைப்பு விடுத்தும், பாஜக ஆட்சி அமைக்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டது. தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்தும் ஆட்.சியமைக்க முன் வரவில்லை. இதனால் கடந்த 12-ந் தேதி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.

 

இதற்கிடையேசிவசேனா தலைமையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிரமடைந்தன. டெல்லியிலும், மும்பையிலும் இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்து நடத்திய சந்திப்புகளால் கூட்டணி உருவாவது உறுதியானது.

சிவசேனாவுடன் கூட்டணி வைக்க பெரிதும் தயக்கம் காட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஓ.கே. சொல்ல, நேற்று மாலை கிட்டத்தட்ட கூட்டணி முடிவானதாகவே செய்திகள் வெளியாகின. மேலும் மும்பையில் இன்று இந்த கட்சிகளின் தலைவர்களும், கூட்டணி பற்றி கூட்டாக அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் கூறப்பட்டது.

 

இதற்கிடையே, நேற்று நள்ளிரவுக்குப் பின் நடந்த, திடீர் திருப்பத்தில், பாஜக பக்கம் தேசியவாத காங்கிரஸ் சாய்ந்தது. பாஜகவுக்கு, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்ட, இன்று காலை அந்த அதிசயம் அரங்கேறியது.

 

ஆளுநர் மாளிகையில் இன்று காலை மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் திடீரென பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்றார்.

 

மகாராஷ்டிரா அரசியலில் ஒரு மாதமாக நீடித்து வந்த குழப்பம், தேசியவாத காங்கிரஸ் ஒரே இரவில் அடித்த பல்டியால் முடிவுக்கு வந்து பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது அம்மாநில அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம்.


Leave a Reply