மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் திடீரென பதவியேற்றது எப்படி..? இவையெல்லாம் நடந்ததா..?10 கேள்விகளை எழுப்பி காங்.,கிடுக்கிப்பிடி!!

மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக இன்று காலை பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜீத்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கூட்டணிக் கட்சியான சிவசேனா உறவை முறித்துக் கொண்ட நிலையில் பாஜக ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

 

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள், இந்தக் கட்சித் தலைவர்களிடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் நேற்று ஒரு சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இன்று இந்த 3 கட்சிகளும் ஆட்சியமைப்பது தொடர்பாக கூட்டாக அறிவிப்பு வெளியிட இருந்தன.

 

இந்நிலையில் தான் மும்பையில், ஆளுநர் மாளிகையில், பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் மிகவும் ரகசியமாக பதவியேற்ற செய்தி வெளியானது. முதலில் இதை யாருமே நம்பவில்லை. மெல்ல மெல்லத்தான் இந்த செய்தி உண்மை என்பது தெரிய வந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது.

இவ்வளவு ரகசியமாகவும், அவசர அவசரமாகவும் பதவியேற்பு விழாவை நடத்தியது தொடர்பாகவும், இதில் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டனவா? என்றும் காங்கிரஸ் கட்சி, 10 கேள்விகளைத் தொடுத்தும், மத்திய அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் தப்பில் எழுப்பியுள்ள அந்தக் கேள்விகள் :

 

1. பாஜக அரசமைக்க உரிமை கோரியது எப்போது? அந்த உரிமையை ஆளுநரிடம் கோரியது யார்?

 

2. பாஜக அரசு அமைக்க ஆதரவளிப்பதாக, கையெழுத்திட்டு கொடுத்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்?

 

3. அந்தக் கையெழுத்துக்கள் உண்மை தானா? என்பதை ஆளுநர் உறுதிப்படுத்தியது எப்போது?

 

4. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ளுமாறு, மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது எத்தனை மணிக்கு ?

 

5. ஆளுநர் பரிந்துரையின் பேரில், நள்ளிரவில் மத்திய அமைச்சரவை கூடியது எப்போது? பங்கேற்ற அமைச்சர்கள் யார்?

 

6.குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு எத்தனை மணிக்கு பரிந்துரை செய்யப்பட்டது?

 

7. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஜனாதிபதி எத்தனை மணிக்கு ஏற்றுக் கொண்டார்? குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்ட உத்தரவு எத்தனை மணிக்கு பிறப்பிக்கப்பட்டது?

8. பதவியேற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜீத் பவார் ஆகியோருக்கு ஆளுநர் எத்தனை மணிக்கு அழைப்பு விடுத்தார்?

 

9. பதவியேற்பு நிகழ்ச்சி எப்போது நடந்தது? தூர்தர்ஷன் உள்ளிட்ட மீடியாக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்கள் , உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு உயர் அதிகாரிகள் என யாருக்கும் அழைப்பு விடாதது ஏன்? ஒரே ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு மட்டும் அழைப்பு விடுத்தது ஏன்?

 

10. முதல்வர், துணை முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர், சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடுவும் விதிக்காததும் ஏன்?

 

ஒரே நாள் இரவில் இத்தனை காரியங்களும் மர்மமாக நடந்தது குறித்து காங்கிரஸ் தரப்பில் எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்விகள், மத்திய அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக இன்று காலை பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜீத்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply