வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது …! வங்கதேசம் முதலில் பேட்டிங்!!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியும், வங்கதேச அணியும் முதன் முதலில் பங்கேற்கும் பகலிரவு டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை பகலிரவு ஆட்டமாக நடத்துவது போல், டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவு ஆட்டமாக நடத்துவது கடந்த 2015-ல் அறிமுகமானது. இதுவரை 11 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவும், வங்கதேசமும் இதுவரை ஒரு போட்டியில் கூட பங்கேற்றதில்லை.

 

இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது போட்டியாக இந்தப் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளுக்குமே இந்தப் போட்டிதான் முதல் பகலிரவுப் போட்டி என்பதும் குறிப்பிடத்த்க்கது.

இந்த பகலிரவு போட்டியில், பிங்க் நிறத்திலான பந்து பயன்படுத்தப்படுவதால் இந்தப் போட்டியும் பிங்க்பால் போட்டி என்றே அழைக்கப்படுகிறது. மேலும் போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமும், எங்கு பார்த்தாலும் பிங்க் நிறத்திலேயே ஜொலிக்கிறது.

 

இந்த முக்கியத்துவம் வாய்ந்த முதல் பகலிரவுப் போட்டியைக் காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்கள் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், டிராவிட் உள்ளிட்டோரும், பிரபலங்கள் பலரும் வருகை தந்துள்ளதுடன், ரசிகர்களும் பெருமளவில் திரண்டுள்ளதால் ஈடன் கார்டன் மைதானம் நிரம்பி வழிகிறது.

 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றுவதுடன், முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் வென்ற சாதனையையும் படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply