அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து: காயமடைந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளம்பெண் ராஜேஸ்வரியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியதுடன், செயற்கை கால் பொறுத்த ஆகும் செலவையும் திமுகவே ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

கோவை சிங்காநல்லூர்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 31) என்ற இளம் பெண் சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி காலையில் இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றார். பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலை தடுப்பில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி திடீரென பிரேக் போட, பின்னால் வந்த லாரி ஒன்று இரு சக்கர வாகனத்தில் மோதியது.இதில் ராஜேஸ்வரியின் கால்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கின.

 

இதனால் இரு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், உயிரைக் காப்பாற்ற இடது காலை அகற்ற வேண்டியதாகிவிட்டது.சென்னையில் இளம் பெண் யுவஸ்ரீக்கு நேர்ந்தது போலவே இந்த சம்பவமும் நேர்ந்ததால் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.அத்துடன் ராஜேஸ்வரியின் பெற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அத்துடன் அகற்றப்பட்ட இடது காலுக்குப் பதிலாக செயற்கைக் கால் பொருத்த ஆகும் முழுச் செலவையும் திமுகவே ஏற்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

மேலும் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில்,
அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள அனுராதாவுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை, இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply