உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் இன்று ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்தாண்டு அக்டோபர் 3-ந்தேதி பதவியேற்ற ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இவரது பதவிக் காலத்தில் பல்வேறு சரித்திர முக்கியம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி கவனத்தை ஈர்த்தவர்.குறிப்பாக பதவிக் காலம் முடியும் முன்னர் கடந்த வாரம் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய அயோத்தி தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது, ரபேல் விவகாரம் தொடர்பான வழக்கு போன்றவற்றிலும் முக்கிய தீர்ப்புகளை வழங்கி, நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த கோகாய், தனது கடைசி வேலைநாள் பணியை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். அவருக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பணியை முடித்துக்கொண்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மரியாதை செலுத்தினார்.
ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பணி ஓய்வையொட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி வரை சுமார் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை எஸ்.ஏ.பாப்டே அலங்கரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.