உள்ளாட்சித் தேர்தல்: மு.க.ஸ்டாலினை வம்படியாக வம்புக்கிழுக்கும் அதிமுக அமைச்சர்கள்!!

உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது என்று அதிமுக தரப்பில் உறுதியாக அறிவித்த நிலையில், தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுப்பியுள்ளார். இதனால் அதிமுக அமைச்சர்கள் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே ஜுரம், காய்ச்சல், கப்சிப் ஆகிவிடுவார் என்றெல்லாம் வம்படியாக வம்பிக்கிழுத்து வருவது தமிழக அரசியல் களத்தில் சூடேற்றியுள்ளது.

 

கடந்த 3 வருடங்களாக இழுபறியாகி வந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் இறுதிக்குள் நடந்தேறி விடும் என்று ஆளும் அதிமுக தரப்பில் அடித்துச் சொல்கிறார்கள். அதற்கேற்ப உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளிலும் அதிமுகவினர் ஜருராகி வருகின்றனர். மேலும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் போனதற்கும் அதிமுக காரணமல்ல;திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்றும் அதிமுக தரப்பில் திமுக மீது பழி போட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை திடீர் என மாற்றம் செய்தது, புதிதாக உருவாக்கப்பட்ட 5 புதிய மாவட்டங்களுக்கு அவசர அவசரமாக எல்லைகள் வகுத்து புதிய கலெக்டர்களை நியமித்தது போன்றவைகளை சுட்டிக்காட்டி, உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்துமா? என்று மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதனால் டிசம்பருக்குள் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது.

மு.க.ஸ்டாலினின் இந்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக அமைச்சர்கள் பலரும் அவரை ஏகத்துக்கும் வம்பிழுக்கும் வகையில் ஏகத்துக்கும் விமர்சித்து வருகின்றனர். மதுரையில் நேற்று அதிமுக விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயக்கம் காட்டுகிறது என்று தொடர்ந்து பேசி வந்த மு.க.ஸ்டாலின், இப்போது தேர்தல் உறுதியாக வரப்போகிறது என்றவுடன் கப்சிப் ஆகி விட்டார். தேர்தல் வருமா? என்று மீண்டும் சர்தேகம் கிளப்ப ஆரம்பித்து விட்டார் என்று கூறியிருந்தார்.

 

இதே போல், அமைச்சர் ஜெயக்குமாரும், தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படவில்லை. ஆடத் தெரியாதவன் அரங்கம் பத்தவில்லை என்று கூறுவது போல, தேர்தலைக் கண்டாலே திமுகவுக்கு காய்ச்சல் வந்து விடுகிறது என்று நக்கலடித்துள்ளார்.

 

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரோ,ஸ்டாலினைப் பார்த்தால் பாட்டெழுதி பெயர் வாங்குபவராக தெரியவில்லை, குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் என்று கிண்டலாக கூறி வம்புக்கிழுத்துள்ளார். போகப் போக தமிழக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அதிமுகவினரும் திமுகவினரும் இன்னும் என்னென்ன லாவணிக் கச்சேரி பாடப் போகிறார்களோ தெரியவில்லை.


Leave a Reply