2018-ல் புதிதாக மறுவரையரை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் தேர்தலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசுத் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கிராமப்புற பஞ்சாயத்துகளில் போட்டியிட முக்கியப் புள்ளிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு களை கட்டியுள்ளது.
இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்கள் குறித்தும், அவற்றுக்கு உள்ளாட்சித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தார். அத்துடன் இந்த அரசு தேர்தலை நடத்துமா?என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மு.க.ஸ்டாலினின் இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தம் மில்லை. 2018-ல் புதிதாக மறு வரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் மாற்றம் தேவைப்படும் பட்சத்தில், தேர்தலுக்குப் பிறகே மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.