--- --:--:-- --

ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ. 260 கோடி வாங்கிய தி.மு.க, அ.தி.மு.க!

8

2025–26 நிதியாண்டில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுடன் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து திமுகவும் அதிமுகவும் மொத்தம் ரூ.260 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தாவைச் சேர்ந்த டைகர் அசோசியேட்ஸ் (Tiger Associates) நிறுவனம், இரு கட்சிகளுக்கும் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட நன்கொடை இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 

 

தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க தாக்கல் செய்துள்ள நன்கொடை விவரங்களின்படி, டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம் ஆறு தவணைகளில் மொத்தம் ரூ.135 கோடி வழங்கியுள்ளது. இது அ.தி.மு.க பெற்ற மொத்த நன்கொடையான ரூ.161.36 கோடியில் சுமார் 84 சதவீதமாகும். அதேபோல், தி.மு.க. தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, அதே டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம் 14 தவணைகளில் ரூ.125 கோடி நன்கொடை அளித்துள்ளது. தி.மு.க பெற்ற மொத்த நன்கொடையான ரூ.191.19 கோடியில் இது 65 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

 

 

2024–25 நிதியாண்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.110 கோடி வழங்கியிருந்தது. 2025–26 நிதியாண்டில் இந்தத் தொகை ரூ.260 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இரண்டு நிதியாண்டுகளில் இரு கட்சிகளுக்கும் அந்த நிறுவனம் வழங்கிய மொத்த நன்கொடை ரூ.370 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், 2025–26 நிதியாண்டில் இரு கட்சிகளும் சேர்த்து அறிவித்த ரூ.352.55 கோடி மொத்த நன்கொடையில், டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்கு மட்டும் சுமார் 74 சதவீதமாக உள்ளது.

 

டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நியமனக் கூட்டாளியான சுப்பையன் நாகராஜன், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருப்பவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், 2024-ல் உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, அந்தத் திட்டத்தின் கீழ் அதிக மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக இருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon