--- --:--:-- --

ரூ. 270 கோடி போதைப்பொருள் எங்கிருந்து வந்தது?

10

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரத்தில் 270 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தவெக முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேரிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சோதனையில் ஈடுபட்ட மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகன் என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

 

 

தொடர்ந்து தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 3 பேர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். வேளாங்கண்ணியில் விடுதியை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து போதைப் பொருட்களை பதுக்கிவைத்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக நிர்வாகி பூபாலன், சுகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவர்களை நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

 

 

இதனிடையே, போதைப் பொருள் வழக்கில் கைதான பூபாலனை தவெகவில் இருந்து நீக்கி நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவித்துள்ளார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் உள்ளிட்ட 4 பேரிடம் 27 மணி நேரத்தைக் கடந்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை இன்று காலை 10 மணியைக் கடந்தும் தொடர்ந்து நீடிக்கிறது. பிரதாபராமபுரத்தில் நேற்று இரவு 8 மணியளவில், பறிமுதல் செய்யப்பட்ட 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை ஐந்துக்கும் மேற்பட்ட தகரப் பெட்டிகளில் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு, கைது செய்யப்பட்ட நான்கு பேருடன் நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

 

 

அங்கு பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேரிடமும் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது. 135 கிலோ போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? கடத்தலுக்கான திட்டம் எப்படித் தீட்டப்பட்டது? இந்தக் கடத்தல் விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கைக்குக் கடல் வழியாகப் போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், விசாரணை இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நிறைவடைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

இதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் எந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்? நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு எந்தச் சிறையில் அடைக்கப்படுவார்கள்? என்பது குறித்த விவரங்கள் அடுத்தகட்டமாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 270 கோடி ரூபாய் சர்வதேச மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், 27 மணி நேரத்தைக் கடந்தும் நீடிக்கும் விசாரணையும், கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் நடைபெறும் விசாரணையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon