இன்று சபரிமலை நடை திறப்பு : பம்பையில் குவிந்த பக்தர்கள்..! பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு “கைவிரிப்பு”!!
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுவதையொட்டி, முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.உரிய அனுமதியின்றி தரிசனம் செய்ய இளம் பெண்கள் வந்தால், பாதுகாப்பு எதுவும் வழங்க முடியாது என கேரள அரசு கைவிரித்துள்ளதால் சபரிமலையில் பரபரப்பு நிலவுகிறது.
ஆண்டுதோறும், மண்டல மற்றும் மகர பூஜைகளுக்காக கார்த்திகை முதல் தேதி முதல் தை மாதம் 5-ந் தேதி வரை சபரிமலை நடை திறப்பது வழக்கம். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனால் முதல் நாளிலேயே ஐயப்பனை தரிசிக்க, நேற்று முதலே ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்துள்ளனர். நிலக்கல் மற்றும் பம்பை பகுதிகளில் குவிந்துள்ள பக்தர்கள், இன்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகே பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்தது. இதனால் தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முனைப்பு காட்டி, சபரிமலை செல்ல முயன்ற பெண் களுக்கு பாதுகாப்பு வழங்கியது. ஆனால் பெண்கள் மலையேற எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டன. இதனால் கடந்தாண்டு மண்டல , மகர விளக்கு காலத்தில் சபரிமலை வளாகமே பெரும் போராட்டக்களமாகி பெரும் களேபரக் காடானது.

இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக்கள் மீது கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதனால் இதன் மீதான விசாரணை, 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் தீர்ப்பு வரும் வரை, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு அனுமதிக்கப்படலாம் என்ற தீர்ப்பு செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியிருந்தது.
இதனால் இந்த ஆண்டும் சபரிமலை செல்ல இதுவரை 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் கேரள அரசோ, கடந்தாண்டு போல், பெண்களை பாதுகாப்பாக சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், சில தெளிவான முடிவுகள் தெரியாத நிலையில், பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல கேரள அரசு முயற்சிக்காது என அம்மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.
இதனால், சபரிமலையில் இந்த ஆண்டும் பெண்கள் மலையேற முயற்சிக்கும் போது போராட்டங்களும் பிரச்னைகளும் எழும் என்பதால் 5 அடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




