இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில், 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 3-ம் ஆட்டம் துவங்கும் முன்னரே டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோஹ்லி அறிவித்தார். இதனால் 343 ரன்கள் பின் தங்கியுள்ள வ.தேச அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி, இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து நேற்று 2-வது நாளில், இந்திய அணியின் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி 243 ரன்கள் எடுத்து சாதனை படைக்க,
நேற்றைய ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்திருந்தது. ஆட்ட முடிவில் ஜடேஜா (60), உமேஷ் யாதவ் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் இன்னிங்சில் வ.தேச அணியை விட 343 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று 3-ம் நாள் ஆட்டத்திலும் இந்தியா மேலும் ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் கோஹ்லியோ, வ.தேச அணியை வீழ்த்த 343 ரன்கள் முன்னிலையே போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலும். இதனால் இன்று காலை ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருக்கும் போதே, கெத்தாக டிக்ளேர் செய்வதாக அறிவித்துவிட்டார்.
இதனால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 343 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம், இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. ஆனால் இந்திய பந்துவீச்சை வ.தேசம் சமாளிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதால், இந்தப் போட்டியில் இந்தியா அபார வெற்றியை ருசிப்பது நிச்சயமாகியுள்ளது.