மக்களுக்கு மூச்சு முட்டும்போது ஜிலேபி முக்கியமா? என கவுதம் கம்பீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

டெல்லி மாநில மக்கள் புகை மூட்டத்தால் மூச்சு திணறிக் கொண்டிருக்க அம்மாநில எம்‌பிக்களில் ஒருவரான கவுதம் கம்பீரோ ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டு அதனை ட்விட்டரில் பதிவிட அவரை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

 

டெல்லி வாசிகளின் அன்றாட நிலைமை புகை மூட்டத்தில் மூச்சு முட்டிக் கொண்டு இருக்கிறது டெல்லி. காற்று மாசை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிமன்றம் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. காற்றுமாசு அபாய கட்டத்தை எட்டி விட்டதாக எச்சரிக்கின்றனர் மாசுகட்டுப்பாட்டு ஆய்வாளர்கள்.

 

மக்கள் மூச்சு முட்டும் நிலையில் இருக்க அதனை தடுப்பது குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மொத்தம் 29 எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வெறும் நான்கு பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக கிழக்கு டெல்லி எம்‌பி கவுதம் கம்பீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அவரோ இந்தூரில் நடைபெற்ற இந்திய வங்கதேச கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பதற்காக சென்றுள்ளார். அத்தோடு நில்லாமல் தனது நண்பர்களுடன் ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டு அந்த புகைப்படத்தை வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

 

இந்த புகைப்படம்தான் கம்பீர் மீது வலைதள வாசிகள் காட்டம் காட்டுவதற்கு காரணமாக உள்ளது. ஷேம் ஆன் கௌதம் கம்பீர் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதில் தங்களது அதிருப்தியை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். டெல்லியின் மக்கள் மூச்சுமுட்டி கொண்டிருக்கும்போது மக்கள் பிரதிநிதியான உங்களுக்கு இந்த கொண்டாட்டம் தேவையா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

பிரபலங்கள் என்ற பெயரில் இது போன்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் மக்கள் பணிகளில் அவர்களின் ஆர்வம் இவ்வளவுதான் இருக்கும் என்றும் அடுத்த முறையாவது மக்கள் பணி செய்பவர்களை தேர்ந்தெடுங்கள் என்றும் வலைதள வாசிகள் பதிவிட்டுள்ளனர்.


Leave a Reply