மின்சாரத்தை துண்டிக்காமல் பழுது நீக்கும் முறை: விரைவில் அறிமுகம்

மின் பழுது ஏற்பட்டால் மின்சாரத்தை துண்டிக்காமல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது பற்றி மின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நவீன கருவிகளை கொண்டு அளிக்கப்பட்ட இந்த பயிற்சியை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.

 

உயர் மின் கோபுரங்கள், மின் வழித்தடங்கள், உயர் மின்னழுத்த கம்பி வடங்கள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் மின்சாரத்தை துண்டிக்காமல் பாதுகாப்பான முறையில் பழுது நீக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் துணை மின் நிலையத்தில் இதற்கான செயல் முறை விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

 

பெங்களூரில் உள்ள மத்திய நிறுவனமான மின்னலப்பாதை நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 160 பேர் மின்சாரத்தை துண்டிக்காமல் மிக உயர் மின்னழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகளை செய்து காட்டினர். உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்கம்பி வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை டிரோன்கள் மூலம் கண்டறிகின்றனர்.

 

பின்னர் அந்த பகுதியில் ஹைட்ராலிக் உடன் கூடிய வாகனத்தை எடுத்துச் சென்று பழுதைப் பார்க்கின்றனர். உயர் அழுத்த மின்சாரம் உடலில் பாயாத வகையில் பிரத்யேக உடையணிந்து மின்சாரத்தை துண்டிக்காமல் பழுதை நீக்குகின்றனர். இந்த பிரத்யேக ஆடை 4 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் காப்பீடும் செய்யப்படுகிறது. பிரத்தியேக ஆடைகள், உயிர்காக்கும் கருவியாக செயல்படுவதால் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. செயல்முறை விளக்கத்தை அமைச்சர் தங்கமணி, பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.


Leave a Reply