வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற முதலமைச்சரின் குறைதீர்வு மனுக்கள் பெறும் கூட்டத்தில் அமைச்சருக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக முதல்வரின் குறை தீர்வு மனுக்கள் பெறும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரான திமுகவை சேர்ந்த நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தனது தொகுதியில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் கணவரை இழந்த அம்பிகா என்ற பெண்ணுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி குறுக்கிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்று கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது அதிமுகவை சேர்ந்த முருகேசன் என்பவர் மைக்கை கீழே தள்ளினார்.
இதனால் திமுக தொண்டர்களுக்கு அதிமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக மேடையில் இருந்தவர்களை அப்புறப்படுத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து இரண்டு கட்சி பிரதிநிதிகளும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதால் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.