மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசல்..! இந்தூர் டெஸ்டில் இந்தியா அபார ரன் குவிப்பு..!!
வங்கதேசத்துக்கு எதிராக இந்தூரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி சாதனை படைக்க, 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா- வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் 150 ரன்களில் வங்கதேசம் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 6 ரன்களில் அவுட்டாக, மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் புஜாரா 54 ரன்களிலும், கேப்டன் கோஹ்லி ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் பின் வந்த ரஹானே, மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர, இந்த ஜோடி வங்கதேச பந்து வீச்சை சிதறடித்தது. மளமளவென ரன் குவித்த அகர்வால், சதம் கடந்த பின், பவுண்டரி சிக்சர்களாக விளாச ஆரம்பித்தார். மறு முனையில் விளாசலில் ஈடுபட்ட ரஹானே 86 ரன்களில் அவுட்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன் பின் மயங்க் அகர்வாலுடன் ஜடேஜா ஜோடி சேர இந்தியாவின் ரன் வேகம் மளமளவென அதிகரித்தது. இரட்டை சதம் கடந்து 243 ரன்கள் எடுத்த நிலையில் அகர்வால் அவுட்டானார்.
அடுத்து வந்த விக்கெட் கீப்பர் சஹா 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த உமேஷ் யாதவ் அடுத்தடுத்து 3 சிக்சர்கள் விளாசி அதிரடி காட்டினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து, முதல் இன்னிங்சில் வங்கதேசத்தை விட 343 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா (60), உமேஷ் (25) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்தூர் டெஸ்ட் போட்டியில், இந்தியா எளிதான வெற்றியைப் பெறும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




