சந்தேக வளையத்தில் சரவணா ஸ்டோர்ஸ்! மிரட்டல்காரர்களுக்கு ரூ. 15 லட்சம் கொடுத்தது ஏன்? முன்பே போலீசிற்கு செல்லாததன் மர்மம் என்ன?
சென்னையில், சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேனேஜரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட புகாரில் போலி நிருபர், 5 வழக்கறிஞர்கள் உட்பட 9 பேர் கைதான நிலையில், மிரட்டிய நபர்களுக்கு பணத்தை வாரி வழங்கியதன் மூலம், சரவணா ஸ்டோர்ஸில் முறைகேடு நடக்கிறதா என்ற சந்தேகத்தை நடுநிலையாளர்கள் எழுப்பியுள்ளனர்.
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவர், தி. நகர் எலைட் சரவணா தங்க நகைக்கடையில், கடந்த 3ஆம் தேதி பழைய தங்க நாணயங்கள் கொடுத்து 3 சவரன் செயின் வாங்கி இருக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் திரும்பி அவர், அந்த நகையில் மாவு போன்ற பொருள் இருந்ததாக கூறி, தான் வாங்கிய 3 சவரன் செயின் போலியானது; அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு, வாக்குவாதம் செய்தார்.
தனியார் பத்திரிகை நிறுவனத்தில், சில காலத்திற்கு முன் வரை பொறுப்பில் இருந்த தனசேகர், போலியான நகை குறித்து மீடியாவில் தகவல் பரப்பில், அசிங்கப்படுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்லாமல் இருக்க ஊழியர்களிடம் 15 லட்ச ரூபாய், தனசேகரன் கேட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்களும், தனசேகரின் மிரட்டலுக்கு பணிந்து, ரூ. 15 லட்சத்தை உடனடியாக அவருக்கு கொடுத்துள்ளனர்.
போலீஸ் வேகம்; போலிகளுக்கு சோகம்

அதன் பிறகு அவ்வப்போது சிலருடன் சென்று, எலைட் சரவணா ஸ்டோர் நகைக்கடையில் ஊழியர்களை பலமுறை மிரட்டியதாகவும் தெரிகிறது. அதேபோல் நேற்று முன் தினம், 15 நபர்களை அழைத்துக்கொண்டு தி. நகரில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் நகை கடைக்கு சென்றுள்ளார்.
போலி நகை பற்றி வெளியில் சொல்லாமல் இருக்க எங்களுக்கு மேலும் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என மிரட்டியதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணா ஸ்டோர் எலைட் தங்க நகைக்கடையின் சார்பில் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தனசேகருடன் உடனிருந்த வடபழனி பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜீவா மற்றும் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமலை ஆகிய 5 வழக்கறிஞர்கள் உட்பட தனியார் கணக்கு பதிவாளர் சையத் அபுதகர் மற்றும் டிரைவர் தண்டபாணி ஆகிய 9 பேரை கைது செய்தனர். போலீசார் காட்டிய வேகம், போலிகளுக்கு சோகமானது.

இதற்கிடையே, தனசேகர் தரப்பில், சரவணா ஸ்டோர் நகை கடை மீது புகார் கொடுக்க வந்ததாகவும், அதை காவல்துறையினர் ஏற்க மறுத்ததாக்வும் கூறப்படுகிறது. எலைட் சரவணா ஸ்டோர் நகைக்கடை தரப்பில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு, தற்போது காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தனசேகர் இடமிருந்து போலியான காவல்துறை அடையாள அட்டையும் 4 ஊடகம் சார்ந்த அடையாள அட்டையும் மேலும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தனசேகர் உடன் வந்த அதிமுக உறுப்பினர் ஜீவா, கொண்டுவந்த ஏர்கன் துப்பாக்கி உட்பட அவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
பணம் கொடுத்ததால் எழும் சந்தேகம்!

இந்த விவகாரத்தில், நகைக்கடை ஊழியர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலை கைது செய்வதில் ஆர்வமும் அவரமும் காட்டிய போலீசார், ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் எதற்காக முன்பு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கவில்லை.
பணம் கொடுத்தது உண்மை என்றால், நகை போலியாக இருந்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழத்தான் செய்வதாக, நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகைகளின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; அத்துடன், போலி நகை பற்றி வெளியே சொல்வேன் என்று சொன்னவர்களை பணம் கொடுத்து சரிகட்ட வேண்டிய அவசியம் என்ன? இப்போது போலீசிற்கு சென்ற சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம், முன்பு 15 லட்சம் கொடுத்த போது, போலீசில் புகார் அளிக்காதது ஏன் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இதற்கும் காவல்துறை விடை கண்டறிய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஊடகச்சங்கம் சொல்வது என்ன?

இதனிடையே, தனசேகரன் முன்பு பொறுப்பில் இருந்த அகில உலக பத்திரிகை ஊடகச்சங்கம் தரப்பை அணுகி, குற்றம் குற்றமே இதழ் விளக்கம் கேட்டது. இது குறித்து அந்த சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜய் ஆனந்த் கூறியதாவது:
புகாருக்குள்ளான தனசேகரை, கடந்த 23.09.2019இல் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டோம். எனவே, அவரது நடவடிக்கைக்கு சங்கம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அவர் போலி பத்திரிகையாளர்; அதே நேரம் சங்கத்தை சில ஊடகங்கள் போலி என்று குறிப்பிடுவது கவலைக்குரியது. எங்கள் சங்கம் உண்மையானது என்பதை ஊடக நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இனியும், இந்த விவகாரத்தில் சங்கத்தை போலி என்று குறிப்பிட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய தனசேகர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எனவே, சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை விவகாரத்தில் மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு விற்கப்பட்டது போலி நகையா? ரூ. 15 லட்சம் கொடுத்து சரிகட்ட நினைத்தது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கும் போலீசார் விடை கண்டறிய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




