ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நமது விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை, ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-இல் ஒப்பந்தம் போட்டது.
இதில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு, பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை, ஊழல் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, 6 மனுக்களையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14இல் தீர்ப்பு அளித்தது.
இதை மறுஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. இவ்வழக்கிலும் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, ரபேல் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என கூறியுள்ள நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர்.
இதன் மூலம், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிஹ்த, அமைச்சர் ராஜ்நாத் சிங், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார். ரபேல் விவகாரத்தில் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, அரசியல் காரணங்களுக்காக சர்ச்சைகளை உருவாக்குவது, தேசத்தின் நலன்களை பின்னுக்கு தள்ளுவதும் தவறு என்றார்.