ரபேல் விவகாரத்தில், பிரதமர் மோடியை திருடன் என்பது போல் நீதிமன்றம் கூறியதாக ராகுல் தெரிவித்தற்கு எதிரான வழக்கில், அவருக்கு அறிவுரை வழங்கி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே, பிரதமர் நரேந்திர மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக, ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து, டெல்லி பாஜக எம்பி மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையின்போது, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக, ராகுல் காந்தி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ராகுல் காந்திக்கு எதிரான வழக்கைத் முடித்து வைப்பதாக கூறியது. அத்துடன், வருங்காலங்களில் ராகுல் காந்தி, நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பேசும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுரை வழங்கியிருக்கிறது.