தங்களின் நிபந்தனைகளை ஏற்று முதல்வர் பதவியை வழங்க முன் வந்தால் மீண்டும் பாஜகவுடன் இணைய தயார் என்று, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இதற்கிடையே தங்களது எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிடம் விலைபோய்விடுவார்களோ என்று கருதி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள், தங்களது எம்.எல்.ஏ.க்களை சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்ளன.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஓட்டலில் தங்கியுள்ள தங்களது எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிட்டதே என்று எம்.எல்.ஏ.க்கள் கவலைப்பட வேண்டாம். மாநிலத்தில் சிவசேனா நிச்சயம் ஆட்சியில் அமரும் என்று கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து பெயர் வெளியிட விரும்பாத சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவா் கூறுகையில், நிபந்தனைகளை ஏற்று, பா.ஜ.க. சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தந்தால் அவர்களிடமும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கூறினார். தற்போதைய நிலையில், முதலில் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் தான் உள்ளது என்று தாக்ரே கூறியதாக, அவர் குறிப்பிட்டார்.