நாடகாவில், 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவில், 2018 சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்வரானார்.
எனினும், 14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பிறகு, கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதில் 3 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 பேர் காங்கிரஸ் கட்சியினர்.
இதைத் தொடர்ந்து குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. அதன்பின், எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக, 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும், 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளார்.
சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 25இல் இறுதி விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி, அவர்களின் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேநேரம், கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.