தெலுங்கானாவில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தெலுங்கானாவில் சத்துப்பள்ளி பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி கள்ளநோட்டு மாற்ற முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சுமார் ஏழு கோடி ரூபாய்க்கான 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 7 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
அந்த கும்பலிடம் நடத்திய தொடர் விசாரணையில் மர்லப்பாடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தெலுங்கானா காவல்துறை கூடுதல் ஆணையர் வெங்கடேஷ் 2000 ரூபாய் நோட்டுகளை விரைவில் செல்லாது என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாகவும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களே மீண்டும் புழக்கத்தில் வர உள்ளதாகவும் கூறி சிலரை அந்த நபர்கள் ஏமாற்றியதாக தெரிவித்தார்.
2000 ரூபாய் நோட்டுகளை 20% கமிஷனுக்கு மாற்றித்தருவதாக கூறி சிலரிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவற்றிற்கு பதிலாக கள்ளநோட்டுக்களை கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கட்டிலும் முதல் இரண்டு நோட்டுகளை உண்மையான 500,1,000 ரூபாய் நோட்டுகளாக வைத்தால் அதனை வாங்குபவர்கள் எளிதில் ஏமாந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.