சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பேராசிரியர்கள் துன்புறுத்தியதே காரணம் என்று வெளியாகியுள்ள தகவல், பரபரப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தவர், மாணவி பாத்திமா லத்தீப். இவர், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர். இவர், 9ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கு , தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே காரணம் என்று அப்போது கூறப்பட்டது. இதற்கிடையே, மாணவியின் மொபைல் போனை பார்த்த போது, தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பரே காரணம் என்று, ஆங்கிலத்தில் பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இது, மாணவி தற்கொலை விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்கொலை முந்தைய நாளான நவ.8ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த தகவலில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தம்மை துன்புறுத்தியதாகக் கூறி, அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார்.
இது, மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று, கேரள முதல்வருக்கு மாணவியின் தந்தை கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக்கு அனுப்பி, ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை விவகாரத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.