பிரதமர் மோடியின் கோரிக்கையாலேயே சிலைகள் மீட்பு

பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே வெளிநாடுகளிலிருந்து இந்திய சிலைகள் மீட்கப்பட்டதாகவும், பொன்மாணிக்கவேல் முயற்சியால் அல்ல என்றும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

 

சிலை கடத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு அதில் சில பகுதியை தவிர மற்றவற்றை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டு உள்ளதால் பொன்மாணிக்கவேல் உச்ச நீதிமன்றத்தை தான் நாட முடியும் எனக் கூறினார்.

பொன் மாணிக்கவேல் பதவி காலம் நவம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், அது நவம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடியின் கோரிக்கையின் பேரிலேயே அங்கிருந்து சிலைகள் மீட்க்கப்பட்ட நிலையில் பொன்மாணிக்கவேல் முயற்சியால் மீட்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக காவல்துறையில் திறமைவாய்ந்த பலர் இருப்பதாகவும் ஒருவரை மட்டுமே சிறந்தவர் எனக் கூற முடியாது என்றும் அவர் சென்றுவிட்டால் அவர்களுக்கு அடுத்ததாக பலர் இருக்கிறார்கள் என்றும் விளக்கமளித்தார்.

 

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரிக்கும் வழக்குகளில் தனது அனுமதி இல்லாமல் எந்த வழக்குகளும் பதிவு செய்யக்கூடாது என கூடுதல் டிஜிபி உத்தரவிட்டது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள். விசாரணையை 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Leave a Reply