தடையே இல்லாத பரனூர் டோல்கேட்!
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் (Paranur Toll Plaza) இனிமேல் கார்களை நிறுத்தத் தேவையில்லை. தமிழகத்தில் முதன்முறையாக, முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக்கட்டண வசூல் முறை (MLFF) அக்டோபர் 1-ம்தேதி நள்ளிரவு முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் ஜி.எஸ்.டி சாலையில் (GST Road) பரனூர் சுங்கச்சாவடி எப்போதும் மிகவும் பரபரப்பாக இயங்கும் ஒரு பகுதியாகும். இங்கு நாளொன்றுக்கு சுமார் 46,500 வாகனங்கள் வந்து செல்கின்றன. காந்தி ஜெயந்தி வார இறுதி விடுமுறை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, ஜி.எஸ்.டி சாலையில் (GST Road) ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முறையில் சுங்கச்சாவடியில் இருந்த பழைய கட்டண வசூல் பூத்கள் அகற்றப்பட்டு, அவற்றுக்கு பதிலாக ஆர்.எப்.ஐ.டி (RFID) ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஏ.என்.பி.ஆர் (ANPR) கேமராக்கள் பொருத்தப்பட்ட உயரமான கேன்ட்ரிகள் (Gantries) அமைக்கப்பட்டுள்ளன.
பாஸ்டேக் (FASTag) கார்டுகள் அல்லது விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள் (நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோரின் வாகனங்கள்) எங்குமே நிற்காமல் அதிவேகமாக சுங்கச்சாவடியைக் கடந்து செல்லலாம். சுங்கச்சாவடிக்கு சற்று முன்பாகவே இந்த டேக்குகள் ஸ்கேன் செய்யப்பட்டுவிடும்.
இங்குள்ள உயர்தர ஆர்.எப்.ஐ.டி (RFID) ரீடர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ஏ.என்.பி.ஆர் (ANPR) கேமராக்கள் வாகனத்தின் எண்களையும், பாஸ்டேக் கணக்கையும் நொடியில் படித்து, அதற்கேற்ப கட்டணத்தை வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்துக்கொள்ளும்.
பாஸ்டேக் வேலை செய்யாத பட்சத்தில், இந்த கேமராக்கள் வாகன எண்களைப் புகைப்படமாக எடுத்து மாற்று வழியில் கட்டணம் வசூலிக்க உதவும். பாஸ்டேக் இல்லாமலோ அல்லது போதுமான பேலன்ஸ் இல்லாமலோ சென்றால், அவர்களுக்கு அபராதச் சலான் அனுப்பப்படும். புதிய தடையற்ற சுங்கக்கட்டண வசூல் (MLFF) முறையினால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் வேகத்தைக் குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிற்கவோ தேவையில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும்.
இந்த தடையற்ற போக்குவரத்து முறை மூலம் பயண நேரம் கணிசமாகக் குறைவதுடன், எரிபொருள் விரயமும், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடும் பெருமளவில் குறையும். மேலும், வழக்கமான சுங்கச் சாவடிகளுக்கான பராமரிப்புச் செலவுகளும் குறையும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
பரனூர் சுங்கச்சாவடியின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நேமிலி மற்றும் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளிலும் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், தாம்பரம் மற்றும் புழலை மதுரவாயல் வழியாக இணைக்கும் சென்னை பைபாஸ் (Chennai Bypass) சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளையும் இந்த அதிநவீன முறைக்கு மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்புள்ளிகளை (Bids) கோரியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





