அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என விமர்சனம் எழுந்த நிலையில் அது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, தாராபுரம் சித்ராவுத்தன்பாளையத்தில் நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார்.
வழிநெடுகிலும் பொதுமக்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரப்புரை கூட்டத்தில் பேசிய சத்யபாமா, தன்னை ஆபாசமாக பேசுகிறார்கள் என மேடையில் கண்கலங்கினார். அப்போது முதல்வர் விஜய், அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.
இதனிடையே தாராபுரத்தில் முதலமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டபோது தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விமர்சித்துள்ளார். மேலும் தவெக வேட்பாளர் சத்யபாமா மேடையில் வழக்கம் போல் தான் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு போனில் அழைப்பு வந்தது.
அதை தொடர்ந்து ராஜ்மோகன் தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் ஒரு தகவலை பரிமாறி கொண்டுள்ளார். அதன்பிறகு தான் அவர் அழுது கொண்டே பேச தொடங்கினார், இவை எல்லாம் ஒரு நாடகம் என எதிர்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வந்தனர். தவெக வேட்பாளர் சத்யபாமா நீலிக்கண்ணீர் வடித்துள்ளார், நன்றாக பேசி வந்தவர் திடீரென அழுததாகவும் அதிமுக எம்பி இன்பதுரை குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுக எம்.பி கனிமொழி அவர்களின் கருத்து மிகப்பெரிய வன்மம். அவர்கள் சொன்னதை கேட்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். இதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தாராபுரம் மேடையில் அமைச்சர் அருண்ராஜ் பேசும் போது முதல்வர் நின்று கொண்டிருக்கிறார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள். அதனால் அவரிடம் விரைவாக பேசுமாறு கேட்டுக்கொண்டேன்.
சத்யபாமா அவர்கள் பேசும் போதும் இதை தான் சொன்னேன். மக்களும் வெயிலில் வெகு நேரம் காத்திருந்தனர், முதலமைச்சரும் மேடையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் விரைவாக பேசுமாறு (Make it fast) என்று தான் கேட்டு கொண்டேன். என் தாயின் மீது ஆணையிட்டு சொல்லி கொள்கிறேன், மேடையில் நடந்தது இதுதான். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்கட்சிகள் திரித்து பேசுவதையும் ஆதாரம் இல்லாமல் சொல்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




