நேற்றுவரை கீரியும் பாம்பும்; இன்று நண்பர்கள்! சிவசேனாவுடன் கைகோர்க்கும் காங்., என்.சி.பி.

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக, சிவசேனா கட்சி ஆட்சியமைக்க, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) ஆதரவளிக்க முன்வந்துள்ளன. மகாராஷ்டிரா முதல்வராக, உத்தவ் தாக்ரே பதவியேற்பார் என்று தெரிகிறது.

 

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு, 105 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இது பெரும்பான்மையைவிட குறைவாகும். கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

எனினும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்தது. அதிகாரத்தை தலா இரண்டரை ஆண்டுகள் பங்கிட்டுக் கொள்ளவும் வலியுறுத்தியது. இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளாத நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. அரசியல் குழப்பங்கள் தொடர்ந்த நிலையில், எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன்வரவில்லை. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டது. அதற்கு மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று நிபந்தனையை, அந்த இரு கட்சிகளும் விதித்தன. அதன்படி, இன்று மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை சிவசேனா அறிவித்தது.

 

இதன் பிறகு தான், மகாராஷ்டிரா அரசியல் களம் மீண்டும் பரபரப்பானது. சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது பற்றி காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் சோனியா தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடத்தியது. அதன் முடிவில், சிவசேனாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, உத்தவ் தாக்கரேவுடன் சோனியா காந்தி தொலைபேசியில் பேசினார்.

 

மறுபக்கம் தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தலைவர்களின் சந்திப்பு மும்பையில் நடந்தது. அத்துடன், சிவசேனா தலைவர்கள், ஆளுநர் பகத்சிங் கோஷ்யரியை இன்று மாலையில் சந்தித்தனர். அப்போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உட்பட 162 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க சிவசேனா உரிமை கோரியது.

 

மேலும், ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் கேட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வராக அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

 

நேற்று வரை எதிரெதிர் முகாம்களில் இருந்த கட்சிகள், இன்று ஆட்சியில் அமருவதற்காக கைகோர்த்துள்ளது, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.


Leave a Reply