ஆண்வாரிசுக்காக கணவனை 16 வயது சிறுமியுடன் மணமுடித்து வைத்த பெண்!

தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆண் வாரிசுக்காக ஒரு விபரீத முடிவு எடுக்கிறார் மனைவி. விளைவு கணவனும் மனைவியும் சிறை சென்று விட மூன்று பெண் குழந்தைகளும் நிர்க்கதியாக இருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கோனூர் கிராமத்திற்குள் திடீரென நுழைகின்றனர் சில போலீசார்.

 

அவர்களை பார்த்ததும் ஒரு வீட்டில் தங்களுடன் தங்கியிருந்த 16 வயது சிறுமியை விட்டுவிட்டு ஒரு கணவனும் மனைவியும் அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்குள் ஓடிச்சென்று புகுந்து கொள்கின்றனர். விரட்டிச் சென்று கணவனையும், மனைவியையும் மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களுடன் தங்கியிருந்த சிறுமியை மீட்டனர்.

 

அந்த கிராமத்தில் திடீரென நடந்த இந்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. விருத்தாசலத்தை அடுத்த திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான அசோக்குமார். கூலித் தொழிலாளியான இவருக்கும், செல்லக்கிளி என்ற பெண்ணுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 

இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. எனினும் தங்களுக்கு ஆண் வாரிசு இல்லையே என ஏக்கத்தில் தம்பதி இருந்துள்ளனர். ஆண் குழந்தைக்கு என்ன செய்வது என்று நினைத்த செல்லக்கிளி தனது கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் ஆண் குழந்தை பிறக்கும் என நம்பியுள்ளார். எனவே தமது வீட்டின் அருகே உள்ள 16 வயது சிறுமியை கணவனுக்கு மணம் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் செல்லக்கிளி.

 

அசோக்குமார் வீட்டின் அருகே உள்ள அந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு திருச்சியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். மனைவியே ஆசைப்படும்போது வாய்ப்பை தவற விடக்கூடாது என காத்திருந்த அசோக்குமார் விடுமுறையில் சிறுமி வீட்டிற்கு வந்து செல்லும் போது அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

 

தாம் அவரை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொண்டால் வசதியாக வாழ வைப்பதாகவும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி வந்துள்ளார் அசோக் குமார். திருமணம் செய்து வைப்பதற்கு தனது மனைவியே சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அந்த சிறுமி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

 

அப்போது தான் தமது திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார் செல்லக்கிளி. சிறுமியின் பெற்றோரிடம் சென்ற செல்லக்கிளி அவரை கோவிலுக்கு அழைத்து செல்வதாக அனுமதி கேட்டுள்ளார். பெற்றோரும் கோவிலுக்கு தானே என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

 

கணவனையும் அந்த சிறுமியையும் கிராமத்திற்கு அழைத்து சென்ற செல்லக்கிளி அங்குள்ள கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் இருவரையும் கோனுர் கிராமத்திற்கு அழைத்து சென்று உறவினர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது அஷோக் குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இதற்கிடையே வையங்குடிக்கு தனியாக வந்த செல்லக்கிளியிடம் மகள் எங்கே என சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.செல்லக்கிளி சரியான பதில் சொல்லாததால் சந்தேகமடைந்த பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

தங்களது மகளை அசோக்குமாரும், செல்லக்கிளியும் கடத்தி சென்று மறைத்து வைத்திருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அசோக்குமாரும், சிறுமியும் கோனூர் கிராமத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போதுதான் சிறுமியை விட்டு விட்டு தப்பியோட முயன்ற செல்லக் கிளியையும் அசோக்குமாரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். ஆண் வாரிசுக்காக 35 வயதான தனது கணவனுக்கு 16 வயது சிறுமியை மனைவி திருமணம் செய்து வைத்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கணவனையும் மனைவியையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Leave a Reply