தடயவியல் பரிசோதனைகூடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ரசாயன பாட்டில்களை எடுத்து வைக்க தாம் நிர்பந்திக்கப்பட்டதாகவும் மறுத்ததால் ஊழியர்கள் தம்மை தாக்க வந்ததாகவும் தலைமை காவலர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நபரின் உடற்கூறு மாதிரிகள் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் மூலம் பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள தடயவியல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரசாயனம் கலந்த பாட்டிலில் இருந்து உடற்கூறு மாதிரிகளை அவரையே எடுத்து வைக்குமாறு துணை இயக்குநரும் ஊழியர்களும் நிர்பந்தித்ததாகவும், கையுறை உள்ளிட்ட எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கேள்வி எழுப்பிய காவலர் மீது அவர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவலர் பாலகிருஷ்ணன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.