‘மிசா’வில் மு.க.ஸ்டாலின் கைதாகவில்லை என்பதை நிரூபிப்பேன்…! மீண்டும் ‘முருங்கை’ மரம் ஏறிய அமைச்சர் மா.பா.!!

மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என்ற சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. ஸ்டாலின் தொடர்பாக நான் சொன்ன கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் தமக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை கைவிட தன் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியதற்கு நன்றி என்றும் நேற்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இன்று மீண்டும் பல்டி அடித்துள்ளார். மு.க.ஸ்டாலின், மிசாவில் கைதாகவில்லை என்பதற்கான ஆதாரத்தை 2 நாட்களில் வெளியிடப் போவதாகக் கூறி, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக சர்ச்சையை தொடர்ந்துள்ளார்.

 

1975-ல் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது, திடீரென சர்வாதிகார ஆட்சி போல் நடத்தினார். மிசா சட்டம் கொண்டு வந்து தமக்கு எதிரானவர்களை எல்லாம் சிறையில் தள்ளினார். அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியும் இந்திராவை கடுமையாக எதிர்த்தார். இதனால் திமுகவினர் பலரும் மிசாவில் கைதாகி சிறை சென்றனர். அதில், திருமணமான சில மாதங்களே ஆன மு.க.ஸ்டாலினும், 11 மாதம் சிறையில் இருந்தார்.

 

மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்தது தொடர்பாக,தற்போது தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திடீரென ஒரு கருத்தைக் கூறி, அது பெரும் சர்ச்சையாகி விட்டது. மிசா காலத்தில் கைதான மு.க.ஸ்டாலின், மிசா சட்டத்தில் கைதாகவில்லை. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே அப்போது அவர் கைதாகி சிறையில் இருந்தார் என்பது தான் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய சர்ச்சையான கருத்து .

மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் கூறிய இந்தக் கருத்தால், திமுகவினர் கொந்தளித்து, போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் அமைச்சரின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. போராட்டம் மேலும் தீவிரமடையும் என்பதால், அமைச்சரின் வீட்டில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

 

இந்நிலையில், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், திராவிட இயக்கத்தின் தியாக வரலாற்றை திரிக்கும் முயற்சி என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜனை கடுமையாக சாடியிருந்தார். அத்துடன் வாழ்க வசவாளர்கள் என்று கூறி, அமைச்சருக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறும் திமுகவினரை அறிவுறுத்தியிருந்தார்.

 

மு.க.ஸ்டாலினின் அறிக்கையைத் தொடர்ந்து, அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும், மு.க.ஸ்டாலின் குறித்து தாம் தெரிவித்த கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.தமக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்துவதை கைவிடுமாறு, தம் கட்சியினரை அறிவுறுத்திய மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி என மா.பா.கூறியிருந்தார். இதனால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றே கருதப்பட்டது.

 

ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல, அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மிசா கைது தொடர்பாக தாம் கூறியது சரிதான் என்பது போல இன்று மீண்டும் தமது கருத்தை கூறி சர்ச்சையை நீடிக்கச் செய்துள்ளார். இன்று அவர் கூறுகையில், மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஷா கமிஷன் விசாரணை அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை. அவருடைய பெயரும் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.இதனாலேயே இந்த சந்தேகத்தை எழுப்பினேன்.

 

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் இரண்டு நாட்களில் உரிய பதிலளிக்கப்படும் என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இன்று மீண்டும் கொளுத்திப் போட்டுள்ளார். இதனால் திமுக தரப்பில் கட்சியினர் மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, அதைத் தொடர்ந்து அமைச்சர் மா.பா. கொடுத்த விளக்கம் மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தது போன்றவற்றால் மிசா சர்ச்சை ஓய்ந்துவிட்டது என்றே கருதப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இன்று மீண்டும் கூறியுள்ள கருத்தால், இந்தச் சர்ச்சை இப்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது.


Leave a Reply