மு.க.ஸ்டாலின் ஒரு காற்று; தமிழகத்தில் நிலவிய வெற்றிடத்தை அவர் நிரப்பிவிட்டார் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். தமக்கு காவிச்சாயம் பூசும் முயற்சி நடக்கிறது. எனக்கும் திருவள்ளுவருக்கும் காவிச்சாயம் பூசும் முயற்சிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
அத்துடன், தமிழகத்தில் இன்னமும் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினி கூறியிருந்தார். அவரது இந்த கருத்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன், இதற்கு பதிலடி தந்துள்ளார். அவர் கூறியதாவது:
ரஜினி, தமக்கு காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள்; சிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அது, அவருடைய கருத்து. அவர் மீது யார் காவி சாயம் பூசினார்கள் என்பதும் எங்களுக்கு தெரியாது. அவர் யாருக்கு இவ்வாறு, பதில் சொல்லியிருக்கிறார் என்றும் தெரியவில்லை.
விரைவில் கட்சியை தொடங்குவேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். அவர் கட்சி தொடங்கட்டும் அப்போது பார்க்கலாம். தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
வெற்றிடத்தை காற்று நிரப்பியே தீரும் என்பது, விஞ்ஞான தத்துவம். அந்த வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது என்று, துரைமுருகன் குறிப்பிட்டார்.