நெருங்கி வரும் கெடு! இறங்கி வரும் பாஜக! மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தீருமா?

மகாராஷ்டிராவில், ஆட்சியமைப்பதற்கான கெடு முடிவடைய ஒரு நாளே உள்ள நிலையில், அந்த மாநில அரசியலில் பரபரப்பும், திருப்பமும் காணப்படுகிறது. சிவசேனாவை சமாதானப்படுத்த, பாஜக தூதுவரை அனுப்பி உள்ளது.

 

மகாராஷ்டிராவில், 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை பலத்திற்கு, 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களை வென்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் 2½ ஆண்டுக்கு முதல்வர் பதவி தேவை என்று, சிவசேனா நிபந்தனை விதித்தது. இதை பாஜக ஏற்கவில்லை. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி இரு வாரங்களை கடந்தும் , புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

 

இதற்கிடையே, 13வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதற்குள், புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆனால், பாஜக-சிவசேனா கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் பனிப்போரால், மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் உருவாகியுள்ளது.

 

இந்நிலையில், பாஜகவும், சிவசேனாவும் தத்தமது நிலையில் இருந்து சற்று இறங்கி வரத் தொடங்கி உள்ளன. மேலும் சிவசேனாவை சாந்தப்படுத்த, வலுதுசாரி தலைவரான 85 வயதான சம்பாஜி பிடேவை, பாஜக தூதுவராக அனுப்பியுள்ளது.

 

இதற்கிடையே, மும்பை மேற்கு பந்தராவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்எல்ஏக்களை, அக்கட்சியின் இளந்தலைவர் ஆதித்யா தாக்கரே சந்தித்துப் பேசியுள்ளார்.
மறுபுறம், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி இன்று சந்தித்துப் பேசுகிறார்.

 

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறுகையில், சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற கடிதத்துடன், நிதின் கட்கரி வருவார் என எதிர்பார்ப்பதாக கூறினார். நாளையுடன் கெடு முடிவடையும் நிலையில், அரசியல் குழப்பங்கள் தீராவிட்டால், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆட்சிக் கட்டிலில் அமர இரு கட்சிகளுமே விரும்புவதால், குடியரசு தலைவர் ஆட்சிக்கு இடம் தராமல், இரு கட்சிகளும் சுமூக முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply