--- --:--:-- --

நேராக சட்டசபை தான்; உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியில்லை: வழக்கம் போல் பின்வாங்கினார் ரஜினி

Rajini 02

வரும் தமிழக உள்ளாட்சி தேர்தலில், தமது ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

 

அரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால், அவரது அரசியல் அறிவிப்பு வந்த பிறகு நடந்த மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

 

அதேபோல், விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சி தேர்தலிலும் தமது அமைப்பு போட்டியிடாது என்று அவர், இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

 

வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மன்றம் போட்டியிடாது. மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது. ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி உடை அணிவிக்கக்கூடாது.

 

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்; நானும் மாட்ட மாட்டேன். என்னை பாஜக உறுப்பினராக காட்ட முயற்சி செய்யப்படுகிறது. பாரதிய ஜனதா எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்றார்.

 

அரசியலில் குதிப்பதாக அறிவித்துவிட்டு, அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ரஜினி, உள்ளாட்சி தேர்தலையும் வழக்கம் போல் புறக்கணித்திருப்பது, எதிர்பார்த்த ஒன்று தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

அதே நேரம், தமது பலத்தை அறிந்து கொள்ள, இதை ஒரு கருவியாக அவர் பயன்படுத்தி இருக்கலாம்; சட்டசபை தேர்தல் தவிர வேறு எதிலும் போட்டியில்லை என்பது, அரசியலில் களமிறங்கப் போகும் கட்சிக்கு சரியான முடிவாக இருக்காது என்று , அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon