பாம்பன் கடலில் நவீன தொழில் நுட்பத்தில் புதிய ரயில்வே பாலத்தின் பூமி பூஜை

பாம்பன் பாலம் 6,776 அடி 2,065 மீட்டர் நீளமானது இதன் கட்டுமானம் 1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 இல் திறந்து வைக்கப்பட்டது.

 

இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.மேலும் நூற்றாண்டை கடந்த பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தில் 2018 டிசம்பர் முதல் வாரம் பழுது ஏற்பட்டது. இதனால் இராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பழுது சரி செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ரயில்கள் மித வேகத்தில் இயக்கப்பட்டன.

 

இதனையடுத்து, பாம்பன் ரயில்வே பாலத்தின் ஸ்திர தன்மையை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதனடிப்படையில் பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில், அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய ரயில்வே பாலம் கட்டப்படும் என பிரதமர் மோடி , நாகர்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

2 கி.மீ., தூரமுள்ள பாம்பன் கடலில் 6 மீட்டர் உயரத்தில், ஒவ்வொரு தூணுக்கும் 60 அடி இடைவெளியில் 99 தூண்கள், சரக்கு கப்பல்கள் எளிதில் செல்லும் வகையில் 27 மீட்டர் உயரத்தில் தூக்கு பாலத்துடன்
புதிய பாலத்திற்கான திட்ட அறிக்கை தயாரானது. புதிய பாலம் கட்டும் பணி பூமிபூஜையுடன் இன்று தொடங்கியது.

 

இது குறித்து ரஞ்சித் பில்ட் கன்ஸ்ட்ரக்ஷன் திட்ட அதிகாரி அப்துல் சமது கூறுகையில், தற்போதைய
பாம்பன் ரயில்வே பாலம் வலுவிழந்துள்ளதால் மிகுந்த கவனத்துடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால்,
ரூ.250 கோடி மதிப்பில் பாம்பன் ரயில்வே புதிய பாலம் கட்டுமான பணி திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் நிறைவடையும். நாட்டுப்படகுகள் எளிதில் செல்லும் வகையில் கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் பாலம் அமைகிறது. மின்சாரம், ஜெனரேட்டர், மனித சக்தி முறையில் இயங்கும் வகையில் தூக்கு பாலம் அமைகிறது.

 

இதனால் சரக்கு கப்பல்கள் துறைமுக அதிகாரிகள் அனுமதிக்கு கடலில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்றார்.


Leave a Reply