வரியில்லா வர்த்தக உடன்பாட்டில் சேர இந்தியா மறுப்பு!

சீனா உள்ளிட்ட நாடுகளுடனான வரியில்லா வர்த்தக உடன்பாட்டில் சேர்வதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. உள் நாட்டு நலனில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என பிரதமர் மோடி பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றுள்ள பிரதமர் ஆசியான் உள்ளிட்ட 16 நாடுகளை இணைக்கும் வரியில்லா வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சில் ஈடுபட்டார்.

 

அப்போது ஏழு ஆண்டுகளுக்கு முன் எதற்காக இந்த உடன்பாடு கொண்டுவரப்பட்டதோ அந்த உண்மையான சாராம்சம் தற்போது இல்லை என்பதாலும் இந்த உடன்பாட்டால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும், இதில் இணைய முடியாது என திட்டவட்டமாக பேசி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் துறையினர் ஆகியோரது நலன்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த உடன்பாட்டில் சேர்வதற்கு இந்தியா தெரிவித்திருக்கும் கவலைகள் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் இது குறித்து தொடர்புடைய நாடுகள் ஒன்றாக அமர்ந்து பேசி திருப்திகரமான முடிவு எடுக்க வேண்டுமென்று இந்தியாவிற்கான வியட்நாம் தூதர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply