ஹரியானாவில் 50 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார். ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்ஸிங்புரா கிராமத்தில் நேற்று குடும்பத்தினருடன் விளையாடும்போது ஐந்து வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறியரக கேமராவை கீழே செலுத்தியபோது வீடியோவில் சிறுமியின் கால்கள் தெரிந்தன. எனவே குழந்தை தலைகீழாக விழுந்து இருப்பதாக தெரிகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் உதவியுடன் மிகப் பெரிய பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் பணி நடைபெற்றது. 50 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுமிக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது.
பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அண்மையில் திருச்சி அருகே நடுக்காட்டு பட்டியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக ஹரியானாவில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அதை பாதுகாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.